Monday 13 April 2020

ஆச்சரியங்களை பலி கேட்கும் தேவதைகள்

திடீரென்று ஒரு நாள் 
என் மேஜையில் வைக்க
ஒரு  பூந்தொட்டி வேண்டுமென்றாள் 

இவள் இந்நாள் வரையில்  என்னிடம் 
கோப்புகள் மட்டுமல்லவா கேட்டிருக்கிறாள் 
நேற்று வீட்டிற்கு சென்றபின் 
அனுப்பிய மின்னஞ்சலுக்கு 
இன்று அலுவலகம் வந்து சேரும்முன் 
மறுமொழி அனுப்பக்  கேட்டிருக்கிறாள் 
நான் தகவல் கொடுக்கவில்லையென்றால் 
பிறிதொரு நாட்களில் நிறுவனம் 
ஸ்தம்பித்து விடுமோ என்று குழம்பியிருக்கிறாள் 

இருப்பினும் 
இவளுக்கு பூந்தொட்டியெல்லாம் தேவைப்படுமா 
என்ற கேள்வியை அடக்கிக்கொண்டு 
ஒரு ஆச்சரியத்தை பரிசளிக்க தயாரானேன் 

என்ன நிறம் ?
என்ன செடி ?
என்ன வகை ?
பெரியதா சிறியதா ?
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு 
கொஞ்சம் மூடிக்கொண்டு இருக்கிறாயா 
என்ற பதிலை நாசூக்கான வார்த்தைகளில் 
பெற்றேன் .

இப்போது நான் நினைத்தாலும் 
பூந்தொட்டியை பரிசளிக்க முடியாது 
ஏனென்றால் 
நான் பரிசளிக்க போவது 
பூந்தொட்டியை அல்ல
ஆச்சிரியத்தை 
அவள் இதை மறந்ததாக நினைக்கும் 
அளவுக்கு அவகாசம் கொடுத்த பின் 
மூன்று லட்சத்தி நாற்பத்தியாராயிரத்தி 
எழுநூற்று பனிரெண்டாவது முறையாக 
உலகின் மிக கொடிய கொலைகாரனை 
கண்டுபிடிக்க புறப்படும்  துப்பறிவாளனை போல் ,
நகரின் மிகச்சிறந்த பூந்தொட்டியை கண்டுபிடிக்க 
தயாரானேன் 

நகரின் தென் பகுதியில் இருந்த ஒரு செடி 
நான் அவள் அளவிற்கு அழகாக இல்லையென்றும் 
கொஞ்சம் வடமேற்க்காக பயணிக்க வேண்டுமென்றும் 
குறி சொன்னது 

அங்கே நான் சந்தித்த செடி 
நான் மிகவும் உயரமாக வளர்வேன் அதனால்  
மேஜையில் எல்லாம் அமர முடியாது என்று திமிராக பேசியது 
எதோ போனால் போகட்டுமென்று 
நகரின் மேற்கு பகுதிக்கு வழி காட்டியது 

மேற்கு பக்கத்தில் பார்த்த செடியிடம் நான் 
எதுவும் பேசவில்லை . 
நான் தேடி வந்தது அது இல்லை என்று 
பார்த்தவுடன் புரிந்து விட்டது 
கொஞ்சம் அதை அவமானப்படுத்துவது போல் 
குற்றவுணர்ச்சி தோன்றினாலும் 
தேவதையின் ஆசையை பூர்த்தி 
செய்வதே கடைமையென்று எண்ணி 
பயணத்தை தொடர்ந்தேன் 

வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது 
வழியில் ஒரு செடி என்னை பார்த்து 
ஏளன சிரிப்பு சிரித்தது 
அதனுடன் சண்டை போடும் மனநிலையில் நான் 
இல்லையென்றாலும் மெதுவாக பேச்சு
கொடுத்து பார்த்தேன் 

சிறு வயதில் நான் உடைத்த அம்மாவின் 
எதோ ஒரு பூச்செடியின் ஆவி தான் 
இப்போது என்னை இந்த  நகரம் முழுவதும் 
துரத்துகிறது என்றது .
அந்த கூற்றிலும் நியாயம் இல்லாமலில்லை
நான் தேடுவது நகரின் மையப்பகுதியில் இருப்பதாக 
சொல்லி என்னை அனுப்பி வைத்தது 

அலிபாபா திருடர் குகைக்குள் 
நுழைவது போல் நகரின் மைய பகுதிக்குள் 
அடியெடுத்து வைத்தேன் 
நான்  ஏதோ காலத்தில் கொன்று குவித்திருந்த செடிகள் 
எல்லாம் குகைக்குள்  உயிர்த்தெழுந்து இருப்பதை கண்டு 
நடுக்கமாக இருந்தது .
தேவதையின் தேவையை 
நிறைவேற்ற வேண்டுமென்ற 
எண்ணம் மட்டுமே தொடர்ந்து 
என்னை செலுத்திக்கொண்டு 
இருந்தது 

அவள் தேவதை என்பதாலோ என்னவோ 
மாயாஜால கதைகளில் ஆட்டிடையன் வேடத்தில் 
வரும் தேவதூதன் தோன்றி எனக்கான செடியை 
காட்டினான் 
ஆம், கண்டுபிடித்துவிட்டேன் !
வேரில் வெந்நீர் ஊற்றி கொன்ற 
அம்மாவின் போகன்வில்லா செடியின் ஆன்மா தான் 
தேவதூதன் காட்டின செடியில் குடியிருக்கிறது 

ஆச்சரியத்தை மடியில் கட்டிக்கொண்டு 
தேவைதைடம் சென்ற போது 
அவள் தன சக தேவதைகளுக்கு ஆச்சரியங்களை 
பரிசளிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் 
ஏனென்றால் அது ஆச்சரியங்களை பரிசளிக்கும் 
வாலன்டைன்ஸ் தினமாம் !
நகர் முழுவதும் அன்று தேவதைகளுக்கு பலியிடப்பட்ட 
ஆச்சரியங்களுக்குள் ஒன்றாக என் என்னுடையதும் 
பலியிடப்பட்டது 

உண்மையில் பரிசுகள் தேவதைகளை ஆச்சரிய 
படுத்துவதில்லை 
ஆச்சரியங்களும் தேவதைகளை ஆச்சரிய 
படுத்துவதில்லை 
நாம்  என்றோ செய்த பாவங்களுக்கு பரிகாரமாக 
இந்த ஆச்சரியங்கள் தங்களை தான் 
தேவதைகளுக்கு பலியிட்டு கொள்கின்றன 

மிகச்சரியாக இந்த பலியிடும் நாளில் 
என்னால் பரிசு கொடுக்க முடிந்தது தான் 
எனக்கு ஆச்சரியமாக இருந்தது 









 


 

Sunday 9 February 2020





பாய் பெஸ்ட்டி எனும் அவலநிலை

சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள பாய் பெஸ்டிக்களின் கதை என்ற கவிதையும் அது தொடர்பான ஏராளமான விவாதங்களும் என் மனதில் பல நினைவலைகளை தூண்டின. பெருன்பாலும் பாய் பெஸ்டிக்கள் இமைக்கா நொடிகள், மன்மதன் போன்ற படங்களில் காதலனுக்கு வரும் வில்லன்களை போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அதெல்லாம் காதலர்களின் சந்தேக புத்தியின் வெளிப்பாடேயன்றி பாய் பெஸ்டிக்களால் ஒருபோதும் காதலனின் இடத்தை அடைய முடியாது.
ஒரு பாய் பெஸ்டி உறவு மலர முழு முதல் தேவை அந்த ஆண் சிங்கிளாகவும் பெண் ஏற்க்கனவே காதலன்/கணவனுடன் இருக்க வேண்டும். இரண்டு கமிட்டேட் அல்லது இரண்டு சிங்கள் நபர்களுக்குள் பாய் பெஸ்டி உறவு தோன்ற வாய்ப்பேயில்லை. அப்படி தோன்றினால் அது காதலிலோ நிரந்தர பிரிவிலோ தான் சென்று முடியும்.
எந்தவொரு ஆணினாலும் ஒருவித மெல்லிய காதலோ மையலோ தோன்றாத பெண்ணுடன் பாய் பெஸ்டியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நெருக்கமான உறவில் பெண்கள் வெளிப்படுத்தும் mood swing என்பது சராசரி ஆணை குழப்பி மன உளைச்சலுக்குள் தள்ள வல்லது . அதை முழுவதும் பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தாங்க வேண்டுமென்றால் காதல் என்ற உணர்வில்லாமல் முடியவே முடியாது.
எங்கே ஒருபாய் பெஸ்டி காதலனிடமிருந்தோ அல்லது தோழனிடமிருந்தோ வேறுபடுகிறான் என்றால் அது அந்த பெண் அவனுக்கு தரும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து தான். தான் அவளுக்கு காதலன் அல்லவென்று அவனுக்கு நன்றாக தெரியும் இருந்தும் காதலனையும் தாண்டிய சில வெளிகளை அந்த பெண் அவனுக்கு திறந்து விடுகிறாள். அவனை பொறுத்த வரையில் காதலன் என்பவன் முற்றிலுமாக அண்டை நாட்டவன். அவள் மனதில் நட்புக்கென்று ஒரு ராஜ்ஜியம் இருக்குமாயின் அதற்கு அவனே சர்வாதிகாரி. அதை அந்த பெண்ணும் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தி கொண்டே இருப்பாள் . அவளது அண்மையில் அவன் சிறப்பானவனாக உணர்வதே எல்லா தொல்லைகளையும் தாண்டி ஒரு பாய் பெஸ்டியாக அவனை தொடர வைக்கிறது.
பாய் பெஸ்டியின் மிகப்பெரிய குழப்பமே அந்த பெண்ணின் மனதில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது தான். அவள் மீது தனக்கிருக்கும் காதலை இந்நேரம் அவள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமே. இருந்தும் என்னை ஏன் கூடவே வைத்திருக்கிறாள். அந்தளவு தான் முக்கியமானவன் என்றால் ஏன் அவளது காதலன் முன்பு மட்டும் அந்நியனாகி விடுகிறேன். அவள் காதலன் ஒன்றுமே செய்யாமல் அனுபவிக்கும் பல சலுகைகளை அவளுக்காகவே தவமிருக்கும் தன்னால் ஏன் அனுபவிக்க முடியவில்லை என்னும் கேள்விக்கு ஒரு பாய் பெஸ்டியால் கடைசி வரை விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை.
அவள் தன்னை உபயோகபடுத்தி கொள்கிறாளோ என்று பல்வேறு தருணங்களில் அவன் நினைக்கிறான். ஆனால் அவ்வாறு உபயோகப்படுவதால் தான் அவள் அருகாமையை பெற முடிகிறது என்று உணர்ந்த அடுத்த தருணமே தன்னைத்தான் சமாதான படுத்திக்கொள்கிறான்.
பாய் பெஸ்டியின் பதவி என்பது எவ்வித நிச்சயத்தன்மையும் அற்ற பதவி. எந்த நேரத்திலும் தான் தூக்கியெறியப்படுவோம் என்று அவன் உணர்ந்தே இருக்கிறான். ஏனென்றால் தன்னை கூட வைத்திருப்பதற்கான எந்த தேவையும் அவளுக்கு இல்லை என்று அவனுக்கு தெரியும்.
பாய் பெஸ்டிகளின் மனதில் எப்போதும் விடை தெரிந்த கேள்விகள் தொக்கி நின்று கொண்டேயிருக்கிறது . அந்த கேள்விகளை அவனே கேட்டு அவனே விடை சொல்லிக்கொள்கிறான் .
அவனது நிலை கண்டு அவன் சுற்றத்தார் வீசும் கிண்டல்களை பற்றி அவனுக்கு கவலையேயில்லை . அவன் கவலையெல்லாம் அந்த கிண்டல்களை தன தோழி எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது தான்.
மனுஷ்ய புத்திரனின் கவிதையின் முடிவு தான் அபாரமானது. எந்த பெண்ணும் விரும்பி விபச்சாரத்திற்குள் செல்வதில்லை என்பது போல் எந்த ஆணும் விரும்பி பாய் பெஸ்டியாக இருப்பதில்லை. காலமும் சூழலும் அவனை அந்த இடத்திற்கு தள்ளியிருக்கிறது. அது அவன் தேர்தெடுத்ததில்லை, அவனுக்கு வாய்க்கப்பெற்றது .
பாய் பெஸ்டியாக இருக்கும் எந்த ஆணுக்கும் அந்த தோழி கேர்ள் பெஸ்டியாக இருப்பதில்லை ..