Saturday, 29 April 2017

பாகுபலி
முதல் விஷயம் .. பாகுபலி போன்றதொரு செலவுமிக்க படத்தை இந்தியாவில் கிடைக்கும் தொழில்நுட்பங்களை வைத்து எடுப்பதே ஒரு பெரும் பணி தான். இது போன்றதொரு செயல் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிய தயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்சர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள் . இவர்களிடமிருந்து மேலாண்மை நுட்பங்களை நிச்சயமாக கற்று கொள்ளலாம் .

பாகுபலியின் மொத்த கதையையும் பார்த்த பின்னர் நமக்கு பிடிபடும் விஷயம் இந்த கதையின் பெரும்பான்மையான பாகம் பாகுபலி 2ன் முதல் பாதியிலேயே அடக்க கூடியது தான். இதை ஒரு லீனியர் கதையாக பார்த்தால் சிவகாமி தேவி எனும் அரசி . அவளுடைய இரண்டு புதல்வர்கள் , அவர்களில் ஒருவன் அரசனாக தேர்ந்தெடுக்க படுக்கிறான் . அவன் திக் விஜயம் செய்ய புறப்பட்டு போன காலத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வைத்து அவன் அண்ணன் ஆட்சியை கைப்பற்றுகிறான் . தொடர்ந்து தம்பியையும் அம்மாவையும் கொன்று தம்பி மனைவியை அடிமைப்படுத்துகிறான் . 25 ஆண்டுகளுக்கு பின் பாகுபலியின் மகன் வந்து  போர் செய்த்து தனது பெரியப்பாக்கு பெரிய ஆப்பா வைக்கிறான் .

இந்த கதை  மொத்தம் 329 நிமிட கதையாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒரு பேட்டியில் ராஜமௌலி சொல்லியிருந்தார் , இந்த கதையை முடித்தவுடனே தனக்கு தெரிந்து விட்டது இதை ஒரு பாகமாக எடுக்க முடியாது என்று . படத்தில் அவர் நம் காதில் சுற்றய பூவை விட பெரிய பூ இந்த பதில் தான். திரைக்கதை பற்றி , கதை சொல்லல் முறைகைளை பற்றி கொஞ்சமேனும் அறிவுள்ள எவருமே சொல்லிவிடுவர் இந்த திரைக்கதைக்கு 329 நிமிடங்களுக்கான தேவை இல்லையென்பதை . இரண்டு பாகமாக பார்த்தால் படத்தில் மொத்தம் 10 பாடல்கள், அது போக பிரதான கதைச்சரடிற்கு தொடர்பில்லாத எத்தனை subplots இதில் உள்ளன . தமன்னா இடம் பெரும் எந்த காட்சியுமே கதைக்கு தேவை இல்லாததல்லவா .. இரண்டு பாகங்களிலும் உள்ள தேவை இல்லாத நகைச்சுவை காட்சிகள் எல்லாம் எதற்கு ? தேவ சேனாவின் மாமா பாத்திரம் எதற்கு ? பாகுபலி இரண்டு பாகமாக வந்தது முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனே அன்றி வேறில்லை . வணிக நோக்கத்தில் தவறே இல்லை தான் . இரண்டு படம் எடுத்து பணம் பண்ணுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லவே இல்லை .. ஆனால் இரண்டும் இரு முழுமையான படங்களாக இருக்க வேண்டுமல்லவா ? இரண்டு படத்திற்கு தேவையான கதை வேண்டுமல்லவா . கதாபாத்திரங்களை நிறுவுவதற்கு மட்டும் ஒரு படம் , மீதி சம்பவங்களை சொல்ல இன்னொரு படமா ? இப்படி ஒரு சினிமா வியாபார உத்தியை எங்குமே கேள்விப்பட்டது இல்லையே . இதிலெல்லாம் மிகப்பெரிய காமெடி WKKB என்றதொரு மொக்கையான கேள்வியை தேசிய ட்ரெண்ட் ஆக்கியது . மோடியின் scripted ட்ரெண்டிங்கிற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் இந்த கதையை அணுகியதால் மட்டுமே இத்தனை தேவையில்லாத கதை சரடுகளை நுழைக்க வேண்டி வந்துள்ளது என்பது எனது அனுமானம் .

இரண்டாவது படத்தை வெறுக்க செய்த விஷயம் இத்தனை inhuman ஆன ஹீரோயிசம் . ஒரு அளவு வேண்டாமா ? இது விஜயகாந்த் படமோ பாலகிருஷ்ணா படமோவாக இருந்தால் பரவாயில்லை . இந்திய அளவில் ஹாலிவுட்டுக்கு நிகரான படமென்று விளம்பரம் செய்யப்படும் படத்தில் இவ்வளவு illogical ஆன ஹீரோயிசம் வேண்டுமா ? அதில் உச்சம் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் . அந்தரத்தில் உருளை அமைத்து பல அடி தூரத்தில் சென்று விழுகிறார்களே , கொஞ்சம் யோசித்து பாருங்கள் , அந்த கேடயத்தை பிடித்திருக்கும் கைகள் என்னவாகுமென்று ? அந்த போர் வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறாதவர்கள் வேறு . கில்லியில் ஹீரோ 300 பேருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிப்பது , கத்தியில் 50 பேரை அடிப்பது போன்ற காட்சிகளும் மிகைப்படுத்த பட்டது தான் . ஆனால் அந்த திரைக்கதையில் எவ்வளவு புத்திசாலித்தனம் இருந்தது . பாகுபலியின் பலமே  இதில் இடம் பெரும் போர் காட்சிகள் தான் . காளகேயர்களுடனான போரில் எரிபொருள் தடவிய துணியை உபயோகித்தது , எருமை மாடுகளை கொண்ட போர்காட்சி , அணையை உடைப்பது போன்றவை எல்லாம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருந்தது, எனில் இறுதிக்காட்சி,... சத்தியமாக சொல்கிறேன் ஒத்துக்கொள்ள  முடியவில்லை . ஏழாம் அறிவுக்கு நடந்த அதே கதி  தான் இந்த காட்சிகளுக்கும் .

மூளையை கழட்டி வைத்து விட்டு இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஓடி விடுங்கள் . நான் எதற்கய்யா மூளையை கழட்டி வைக்க வேண்டும் . எனது மூளையை திசை திருப்ப வேண்டியது அந்த திரைக்கதை ஆசிரியனுடைய வேலை அல்லவா? படத்திற்கு வரும்போதே மூளையை கழட்டி வைத்து வாருங்கள் என்று ஒரு திரைக்கதை ஆசிரியன் / இயக்குனர் சொல்வாராகில் அதன் பேர் தடித்தனம் . நான் மூளையை கழட்டி வைக்க வேண்டுமென்றால் உனக்கெதற்கு இந்த ஆள் அம்பு சேனை 300கோடி பணம் எல்லாம் ? இன்செப்ஷன் போன்ற படங்கள் எப்போது இந்தியாவில் வரும் என்று அமீர் கானிடம் கேட்ட போது , அவர்கள் மூளையை நன்றாக உபயோகித்து படம் பார் என்கிறார்கள் , நாமோ மூளையை கழட்டி வைத்து விட்டு படம் பார்க்க சொல்கிறோம் என்றார்.

பாகுபலியில் கவரக்கூடியது இதன் கிராபிக்ஸ் காட்ச்சிகள் தான். நிச்சயமாக இதன் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞ்சர்களின் உழைப்பும் நேரமும் கொட்டிக்கிடக்கிறது .அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த பாராட்டுக்கள். யு கைஸ் டிசர்வ் எ ஸ்தாண்டிங் ஓவேஷன் . பிக் சல்யூட் .

எந்த ஒரு கதைக்கும் ஒரு அரசியல் இருக்கும் . பாஹுபலிக்கும் அது இருக்கிறது . அத ஜஸ்ட் லைக் தாட் கடந்து சென்று விட முடியாது .

"தலித் மக்கள் மேல பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருக்குங்க .. என்னடா இவனுங்க எப்ப பாத்தாலும் ஜாதி ஜாதின்னு பேசினு இருக்காங்க , இவங்களுக்கு வேற பிரச்சனையே இல்லையா ? நான் சாத்தியமா சொல்றேங்க எனக்கு ஜாதி ஒன்னு தான் பிரச்சனை . நான் எங்க போனாலும் என் ஜாதி என் கூடவே வரும் . "

விகடன் மாணவ பத்திரிக்கையாளர் கேள்வி பதில் நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது .

கொஞ்சம் கூட மனித தன்மையோ ஈவு இரக்கமோ அற்ற செயல்களை கலாச்சாரம் என்ற பெயரில் போற்றி பாதுகாக்கும் கயவாளித்தனமான தேசம் இது. இங்கே இந்த மனு அரசியல் எந்த ரூபத்தில் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அதை நொண்டி நொங்கெடுக்க வேண்டியது ஒரு பகுத்தறிவாளனின் கடமை . அதனால் இது போன்ற ஒரு வணிக படத்தை முன்வைத்து இப்படி ஒரு கருத்து தேவையா என யாரும் நினைக்க வேண்டாம் .

தமிழ் நாட்டில் தான் ஜாதி பெயரை பேருக்கு பின்னால் வழக்கம் கிடையாதே , அப்புறம் என்னய்யா பல்வாள் "தேவன்" பிக்காளி "தேவன்" ?? காளகேய மொழி ஒன்றை உருவாக்கியவர்களுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா ? இது ராஜமௌலிக்கு தெரியவில்லை பாவம் என்றால் மதன் கார்க்கிக்கும் தான் தெரிய வில்லையா ?

மீண்டும் மீண்டும் பாகுபலி சத்திரிய தர்மம் தர்மம் என்று கொக்கரிக்கிறாரே ? அந்த தரும கருமத்தை வைத்து தான் இந்த நாட்டில் இவ்வளவு அடிமை படுத்துதல் நடந்தது . அதை கூவி கூவி விற்கும் ஒருவனை கதாநாயகனாக காட்டுவதன் மூலம் ராஜமௌலி என்ன சொல்ல வருகிறார் . மனு தர்மம் எனும் அயோக்கியத்தனத்திற்கு விளக்கு பிடிக்கும் வேலையில்லாமல் வேறென்ன இது?

இதற்க்கெல்லாம் உச்சமாக கட்டப்பா கதாபாத்திரம் . தான் ஒரு அடிமை என்பதையே மீண்டும் மீண்டும் தனக்கு தானே கூறி புளங்காகிதம் அடையும் ஒரு கதாபாத்திரம் . வார்த்தைக்கு வார்த்தை தான் ஒரு அடிமை என்பாராம் . தன சொந்த மூளையை கொஞ்சம் கூட உபயோகிக்க மாட்டாராம் , பிஞ்சு குழந்தையின் காலை கூட தலையில் தூக்கி வைத்துக்கொள்வாராம் . மாவீரன் பாகுபலி சத்திரியன் என்றால் அவன் குடும்பத்துக்கு அடிமையாக வேலை செய்யும் கட்டப்பா எந்த தருமத்தை கடை பிடிக்க வேண்டியவன் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .இந்த கட்டப்பா வை பல்வாள் தேவன் அவமான படுத்துவதை விட பாகுபலியே அதிகமாக அவமான படுத்துகிறான் . பாகுபலி தன்னிடம் காட்டும் கரிசனத்தை கண்டு உச்சி குளிர்ந்து போகிறார். ஒருவன் தன்னிடம் கரிசனம் காட்டுவதே பெரும் பேரு  என்று ஒரு மனிதன் நினைக்கிறான் என்றால் அவனுக்குள் எவ்வளவு மானங்கெட்ட தன்மை இருக்கும் . அய்யா பாகுபலிக்களே , கட்டப்பக்களுக்கு தேவை உங்கள் கரிசனமோ  அன்போ கிடையாது , அவர்களின் தேவை மரியாதை தான் . உன் கரிசனத்தை குப்பையில் போடு . ஒருவேளை கட்டப்பா உன் குழந்தையை தூக்க மறுத்திருந்தால்? உன்னுடன் கூட்டு சேர்ந்து போரிட மறுத்திருந்தால் ? அப்போதும் உன் எதிர்வினை இப்படி தான் இருக்குமா ?

இரண்டு  வருடங்களுக்கு முன் காட்சி பிழை இதழிலோ அந்தி மழை இதழிலோ வாசித்த ஒரு கட்டுரையில் வாசித்த  கருத்து தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவை , ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் கூட்டமாக ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே பிஜேபி ஆஎஸ்எஸ் போன்ற அமைப்புகளின் 60 ஆண்டு கால ஆசை . ஆனால் அது அவர்களுக்கு நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது . எனில் மொத்த இந்தியாவும் பாகுபலியை கொண்டாடுவதன் மூலம் அவர்களால் சாதிக்க முடியாததை அவர்கள் ஆட்சி காலத்திலேயே சத்தமே இல்லாமல் சாத்தித்து காட்டியிருக்கிறது பாகுபலி

நண்பர்களே, தயவு செய்து ஒரு படத்திற்காக அதிகமாக கூவுகிறேன் என்று நினைக்க வேண்டாம் . மேலே கூறியது போன்ற விஷயங்களை பாகுபலி போன்ற அனைத்து மக்களுக்கும் சேரும் படத்தில் எந்தவொரு கூசலும் இல்லாமல் காட்டுகிறார்கள் , நாமும் அதை பற்றின சுரணையே இல்லாமல் பார்த்து வருகிறோம் என்றால் நமக்குள்ளும் அந்த மனநிலையே இருக்கிறதுஎன்று அர்த்தமல்லவா ? அதை சுட்டி காட்டியே ஆக வேண்டும் என்பதாலே குறிப்பிடுகிறேன் .

கடைசியாக,  கடந்த ஒரு சில வருடங்களாக சினிமாவை பயில முயற்சி செய்யும் ஒரு மாணவனாக சொல்கிறேன். சினிமாக்காரனும் அடிப்படையில் ஒரு கதை சொல்லி மட்டுமே . அந்த கதையின் மூலம் அவன் அரசியல் பேசுகிறானா பொழுது போக்குகிறானா அல்ல வேறேதும் முயல்கிறானா என்பது இரண்டாம் பட்சமே , ஆனால் கதை சொல்லியே ஆக வேண்டும் . அதற்காக அவன் பயன் படுத்தும் கருவிகள் மட்டுமே மற்ற ( பணம் , தொழில்நுட்ப கலைஞ்சர்கள் ) அனைத்தும். பாகுபலியின் தொழில்நுட்பத்தின் மீதான மிரட்ச்சியால் படத்தை
 கொண்டாடுபவர்கள் சினிமா என்னும் கலையை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் .

Tuesday, 4 April 2017

சத்திய சோதனைகடந்த ஜனவரி 30 அன்று நண்பர் கருந்தேள் ராஜேஷின் ஒரு பதிவை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அவர் எப்படி தத்தியாக இருந்தார் அதன் பின் எவ்வாறு தன்னை மாற்றி கொண்டார் என்பதை பற்றின பதிவே அது . படிக்க படிக்க விறுவிறுவென இருந்தது, ஏனெனில் நீண்ட நாட்களாக தேளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அவரது புரிதல், maturity , genius ஐ பார்த்து மிகவும் வியந்துள்ளேன் . அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் தத்தியாக இருந்து மூன்றே வருடங்களில் தன்னை மாற்றிக்கொண்டார் என சொன்னபோது தொற்றிக்கொண்ட ஆர்வமே . தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு காரணம் ஒரு புத்தகம் என்றும் குறிப்பிட மனதிற்குள் என்ன புத்தகமாக இருக்குமென ஓடிக்கொண்டிருந்தது . இறுதியில் அந்த புத்தகத்தின் பெயரை அறிந்த பொது ஆச்சிரியம் இருமடங்கானது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் சுயசரிதையான சத்திய சோதனையே அது. அவ்வளவு காலம் யார் மீது மிகுந்த விமர்சனங்கள் வைத்தோமோ  அவருடைய சுய சரிதை தான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையை மாற்றியிருக்கிறது என்று தெரிந்ததுமே முதல் வேலையாக அமேசானில் ஆர்டர் செய்தென். காந்தி பிறந்த மண்ணான குஜராத் அகமதாபாத்தில் இருந்து அந்த புத்தகம் ஷிப் ஆகி வருவதை ட்ராக் செய்வதே உற்ச்சாகமான அனுபவமாக இருந்தது (கொஞ்சம் ஓவரா தெரியுதோ :D)

புத்தகம் கிடைத்தவுடனே அப்போது வாசித்துக்கொண்டிருந்த விநாயக முருகனின் வலம் நாவலை  கிடப்பில் போட்டுவிட்டு இதை துவங்கினேன். 

நிச்சயமாக நண்பர்களே... அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் . அதிலும் பெரியார் அபிமானிகள் இதை விருப்பு வெறுப்பின்றி படித்தே ஆக வேண்டும் . ஏனெனில் நான் பெரியார் சிந்தனை பள்ளியை சேர்ந்தவன் . அதனாலேயே பெரியார் அபிமானிகள்  விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டும் என்று சொல்கிறேன் . 

நாம் அனைவருக்குமே காந்தி மீது ஒரு சிறிய வெறுப்பு இருக்கும் . அல்லது காந்தியை குறை கூறுவதை ஸ்டைல் statement ஆக வைத்திருப்போம் . காந்திதிக்கு இருந்த , அல்லது இருந்ததாக கேள்விப்பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மீதான ஒவ்வாமையே அதற்க்கு காரணமாக இருக்கும். அவரது சுய சரிதையை வாசிக்கும்போது இந்த பிம்பங்கள் நிச்சயமாக உடையும் . நிச்சயமாக அவரும் நம் பெரியாருக்கு நிகரான ஒரு ஆளுமையே . பெரியார் ஒரு superman என்றால் காந்தி ஒரு batman . சூப்பர்மேன் நார்மல் மனிதன் கிடையாது . இயல்பிலேயே superhumen சக்திகள் கொண்டவன், அதுபோல் பெரியார் பிறப்பிலேயே ஒரு ஆல்பா . ஒரு மிக உறுதியான கருத்தாளனாக , சமூக போராளியாக மாறுவதற்கு முன்பே அசாதாரணமான குணநலன்களை கொண்டிருந்தவர். எந்தவிதமான சமூக கட்டுகளுக்கும் மாஸ் ஹிஸ்டிரியாவுக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர். அவரது பால்ய காலத்தை பற்றி வாசிக்கும்போது ஒரு 'என்னமோ போடா மாதவா' attitude  காணக்கிடைக்கும் . புத்தரும் கவுண்டமணியும் சேர்ந்த கலவை பெரியார். be  like bro வின் thug life போன்றது அவரது வாழ்க்கை.

ஆனால் ஒரு சாதாரண மனிதன் பெரியாராக முடியுமா? மிகவும் கடினம். ஒருவன் பெரியார் சிந்தனை பள்ளியின் மாணவன் ஆகலாம் . புத்தரின் சீடர்கள் மீண்டும் லைகீக வாழ்க்கைக்குள் திரும்பிய பின் எப்படி வாழ்ந்திருப்பார்களோ அது போல் பெரியார் அபிமானிகளால் வாழமுடியும். ஆனால் அந்த சீடர்கள் எப்படி புத்தரில்லையோ அது போலவே நாமும் பெரியார் ஆக  முடியாது.

இங்கு தான் காந்தியின் ஆளுமை முக்கியமாதாகிறது . காந்தி இயல்பில் ஒரு ஆல்பா அல்ல. அவர் முழுக்க முழுக்க self  made personality . ப்ருஸ் வெய்ன் பேட்மேன் ஆனது போல் கடும் முயற்சிகள் மேற்கொண்டு காந்தி மகாத்மா ஆகிறார். 

சிறு வயதில் காந்தி ஒரு பயங்காளி . கூட்டத்தில் பேசுவதென்றால் பயம். பெரியவர் பேச்சை ஏன் எதற்க்கென்று கேள்வி கேக்காமல் அப்படியே கடைபிடிக்கும் பழக்கமுடையவர் (இந்த இடத்தில் நமது பகுத்தறிவு பகலவன் தன் சித்தி வீட்டில் அடித்த லூட்டிகளை ஒப்பிட்டு பாருங்கள்  ). மனைவியை சந்தேகித்து torture செயகிறார். செக்ஸ் ஐ enjoy செய்வதில் குற்றவுணர்வு கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு தேடல் மட்டும் அவருக்குள் இருக்கிறது. எவ்வளவு நகைப்புக்கு உள்ளானாலும் சரி, தனது செயல்களை தொடர்ந்து ஒரு சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார். தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் கூர்ந்து கவனிக்கிறார். அதற்கான பிரதிவினையை ஆராய்கிறார் . தனது மனமும் அறிவும் எதை சரி என்று சொல்கிறதோ அதற்க்கேற்றவாறு பிரதிவினைகளை மாற்றிக்கொள்கிறார். இந்த குணாதிசயம் தொடர தொடர சொந்தமாக முன்னெடுப்புகள் எடுக்கவும் தொடங்குகிறார். முன்னெடுப்புகள் தோல்வி அடையும் போதும் நாம் சாதாரண மனிதர்கள் செய்வது போல அலுத்துக்கொள்ளவும் செய்கிறார். வாழ்க்கையையே ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ஆக வாழ்கிறார். 

காந்தியின் இந்த சமவயதை பெரியாருடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரியாருக்கு இது போன்ற பிரக்ஞ்சைகள் எதுவுமே இருக்காது. மனம் போன போக்கில் வாழ்க்கையை ஜாலியாக கழித்துக்கொண்டிருப்பார். காந்திக்கு தனக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் தெரிந்திருக்கிறது . மிக கவனமாக வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனதுடன் எதிகொள்கிறார். 

நமது ஆளுமையை  மாற்றவேண்டும் என்று பிரயத்தனப்படும் அனைவருக்குமே , தனது சக்த்திக்கு மீறிய விஷயங்களை கையாள்வதில் ஒரு மனப்போராட்டம் இருக்கும் . வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் விடா முயற்சியால் வாழ்வின் போக்கை மாற்ற முயலும் மனப்பாங்கையும் சரியாக balance செய்யும்போதே ஒரு மனிதன் ஆல்பாவாக , தலைவனாக , ஆளுமையாக மாற முடியும். இந்த இடத்திலேயே ஒரு சாதாரண மனிதனுக்கு காந்தி முன்னுதாரணமாகிறார். நாங்கள் உங்களை எவ்வளவு தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி, காந்தியால் மகாத்மாவாக முடியுமென்றால் உங்களாலும் உங்கள் ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியும் . இதை ஒரு துளி கூட அவரை தரம் தாழ்த்தி சொல்லவில்லை, நம்மை போன்ற ஒரு சகமனிதரின் பயணத்தை வியந்து பார்த்து சொல்கிறேன் . 

சுய முன்னேற்ற நூல்களை படித்து அதன்படி மாற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் காந்தியை படியுங்கள். நாம் இப்போது முயல்வதை அந்த மனிதர் 130 ஆண்டுகளுக்கு முன்பே செய்து வெற்றி கண்டிருக்கிறார். அவர் நம்மில் ஒருவர். நமது சகபயணி , தொடர்ச்சியான முயற்சிகளுக்கு என்றுமே பலன் கிடைக்காமல் போகாதென்பதை நம் காதுகளில்  அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

பின்குறிப்பு : ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை பார்க்கவில்லையென்றால் உடனே பாருங்கள். அந்த படத்தில் காந்தியை தீவிரமாக வாசிக்கும் சஞ்சய் தத்துடன் காந்தி வந்து உட்காந்துக்கொள்வார். நண்பனாக வழிகாட்டியாக வருவார். சத்திய சோதனை படித்த பின்பு நம்மாலும் அந்த அனுபவத்தை உணர முடியும்