Sunday 9 February 2020





பாய் பெஸ்ட்டி எனும் அவலநிலை

சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள பாய் பெஸ்டிக்களின் கதை என்ற கவிதையும் அது தொடர்பான ஏராளமான விவாதங்களும் என் மனதில் பல நினைவலைகளை தூண்டின. பெருன்பாலும் பாய் பெஸ்டிக்கள் இமைக்கா நொடிகள், மன்மதன் போன்ற படங்களில் காதலனுக்கு வரும் வில்லன்களை போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அதெல்லாம் காதலர்களின் சந்தேக புத்தியின் வெளிப்பாடேயன்றி பாய் பெஸ்டிக்களால் ஒருபோதும் காதலனின் இடத்தை அடைய முடியாது.
ஒரு பாய் பெஸ்டி உறவு மலர முழு முதல் தேவை அந்த ஆண் சிங்கிளாகவும் பெண் ஏற்க்கனவே காதலன்/கணவனுடன் இருக்க வேண்டும். இரண்டு கமிட்டேட் அல்லது இரண்டு சிங்கள் நபர்களுக்குள் பாய் பெஸ்டி உறவு தோன்ற வாய்ப்பேயில்லை. அப்படி தோன்றினால் அது காதலிலோ நிரந்தர பிரிவிலோ தான் சென்று முடியும்.
எந்தவொரு ஆணினாலும் ஒருவித மெல்லிய காதலோ மையலோ தோன்றாத பெண்ணுடன் பாய் பெஸ்டியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நெருக்கமான உறவில் பெண்கள் வெளிப்படுத்தும் mood swing என்பது சராசரி ஆணை குழப்பி மன உளைச்சலுக்குள் தள்ள வல்லது . அதை முழுவதும் பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தாங்க வேண்டுமென்றால் காதல் என்ற உணர்வில்லாமல் முடியவே முடியாது.
எங்கே ஒருபாய் பெஸ்டி காதலனிடமிருந்தோ அல்லது தோழனிடமிருந்தோ வேறுபடுகிறான் என்றால் அது அந்த பெண் அவனுக்கு தரும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து தான். தான் அவளுக்கு காதலன் அல்லவென்று அவனுக்கு நன்றாக தெரியும் இருந்தும் காதலனையும் தாண்டிய சில வெளிகளை அந்த பெண் அவனுக்கு திறந்து விடுகிறாள். அவனை பொறுத்த வரையில் காதலன் என்பவன் முற்றிலுமாக அண்டை நாட்டவன். அவள் மனதில் நட்புக்கென்று ஒரு ராஜ்ஜியம் இருக்குமாயின் அதற்கு அவனே சர்வாதிகாரி. அதை அந்த பெண்ணும் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தி கொண்டே இருப்பாள் . அவளது அண்மையில் அவன் சிறப்பானவனாக உணர்வதே எல்லா தொல்லைகளையும் தாண்டி ஒரு பாய் பெஸ்டியாக அவனை தொடர வைக்கிறது.
பாய் பெஸ்டியின் மிகப்பெரிய குழப்பமே அந்த பெண்ணின் மனதில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது தான். அவள் மீது தனக்கிருக்கும் காதலை இந்நேரம் அவள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமே. இருந்தும் என்னை ஏன் கூடவே வைத்திருக்கிறாள். அந்தளவு தான் முக்கியமானவன் என்றால் ஏன் அவளது காதலன் முன்பு மட்டும் அந்நியனாகி விடுகிறேன். அவள் காதலன் ஒன்றுமே செய்யாமல் அனுபவிக்கும் பல சலுகைகளை அவளுக்காகவே தவமிருக்கும் தன்னால் ஏன் அனுபவிக்க முடியவில்லை என்னும் கேள்விக்கு ஒரு பாய் பெஸ்டியால் கடைசி வரை விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை.
அவள் தன்னை உபயோகபடுத்தி கொள்கிறாளோ என்று பல்வேறு தருணங்களில் அவன் நினைக்கிறான். ஆனால் அவ்வாறு உபயோகப்படுவதால் தான் அவள் அருகாமையை பெற முடிகிறது என்று உணர்ந்த அடுத்த தருணமே தன்னைத்தான் சமாதான படுத்திக்கொள்கிறான்.
பாய் பெஸ்டியின் பதவி என்பது எவ்வித நிச்சயத்தன்மையும் அற்ற பதவி. எந்த நேரத்திலும் தான் தூக்கியெறியப்படுவோம் என்று அவன் உணர்ந்தே இருக்கிறான். ஏனென்றால் தன்னை கூட வைத்திருப்பதற்கான எந்த தேவையும் அவளுக்கு இல்லை என்று அவனுக்கு தெரியும்.
பாய் பெஸ்டிகளின் மனதில் எப்போதும் விடை தெரிந்த கேள்விகள் தொக்கி நின்று கொண்டேயிருக்கிறது . அந்த கேள்விகளை அவனே கேட்டு அவனே விடை சொல்லிக்கொள்கிறான் .
அவனது நிலை கண்டு அவன் சுற்றத்தார் வீசும் கிண்டல்களை பற்றி அவனுக்கு கவலையேயில்லை . அவன் கவலையெல்லாம் அந்த கிண்டல்களை தன தோழி எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது தான்.
மனுஷ்ய புத்திரனின் கவிதையின் முடிவு தான் அபாரமானது. எந்த பெண்ணும் விரும்பி விபச்சாரத்திற்குள் செல்வதில்லை என்பது போல் எந்த ஆணும் விரும்பி பாய் பெஸ்டியாக இருப்பதில்லை. காலமும் சூழலும் அவனை அந்த இடத்திற்கு தள்ளியிருக்கிறது. அது அவன் தேர்தெடுத்ததில்லை, அவனுக்கு வாய்க்கப்பெற்றது .
பாய் பெஸ்டியாக இருக்கும் எந்த ஆணுக்கும் அந்த தோழி கேர்ள் பெஸ்டியாக இருப்பதில்லை ..