Saturday, 29 April 2017

பாகுபலி
முதல் விஷயம் .. பாகுபலி போன்றதொரு செலவுமிக்க படத்தை இந்தியாவில் கிடைக்கும் தொழில்நுட்பங்களை வைத்து எடுப்பதே ஒரு பெரும் பணி தான். இது போன்றதொரு செயல் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிய தயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்சர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள் . இவர்களிடமிருந்து மேலாண்மை நுட்பங்களை நிச்சயமாக கற்று கொள்ளலாம் .

பாகுபலியின் மொத்த கதையையும் பார்த்த பின்னர் நமக்கு பிடிபடும் விஷயம் இந்த கதையின் பெரும்பான்மையான பாகம் பாகுபலி 2ன் முதல் பாதியிலேயே அடக்க கூடியது தான். இதை ஒரு லீனியர் கதையாக பார்த்தால் சிவகாமி தேவி எனும் அரசி . அவளுடைய இரண்டு புதல்வர்கள் , அவர்களில் ஒருவன் அரசனாக தேர்ந்தெடுக்க படுக்கிறான் . அவன் திக் விஜயம் செய்ய புறப்பட்டு போன காலத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வைத்து அவன் அண்ணன் ஆட்சியை கைப்பற்றுகிறான் . தொடர்ந்து தம்பியையும் அம்மாவையும் கொன்று தம்பி மனைவியை அடிமைப்படுத்துகிறான் . 25 ஆண்டுகளுக்கு பின் பாகுபலியின் மகன் வந்து  போர் செய்த்து தனது பெரியப்பாக்கு பெரிய ஆப்பா வைக்கிறான் .

இந்த கதை  மொத்தம் 329 நிமிட கதையாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒரு பேட்டியில் ராஜமௌலி சொல்லியிருந்தார் , இந்த கதையை முடித்தவுடனே தனக்கு தெரிந்து விட்டது இதை ஒரு பாகமாக எடுக்க முடியாது என்று . படத்தில் அவர் நம் காதில் சுற்றய பூவை விட பெரிய பூ இந்த பதில் தான். திரைக்கதை பற்றி , கதை சொல்லல் முறைகைளை பற்றி கொஞ்சமேனும் அறிவுள்ள எவருமே சொல்லிவிடுவர் இந்த திரைக்கதைக்கு 329 நிமிடங்களுக்கான தேவை இல்லையென்பதை . இரண்டு பாகமாக பார்த்தால் படத்தில் மொத்தம் 10 பாடல்கள், அது போக பிரதான கதைச்சரடிற்கு தொடர்பில்லாத எத்தனை subplots இதில் உள்ளன . தமன்னா இடம் பெரும் எந்த காட்சியுமே கதைக்கு தேவை இல்லாததல்லவா .. இரண்டு பாகங்களிலும் உள்ள தேவை இல்லாத நகைச்சுவை காட்சிகள் எல்லாம் எதற்கு ? தேவ சேனாவின் மாமா பாத்திரம் எதற்கு ? பாகுபலி இரண்டு பாகமாக வந்தது முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனே அன்றி வேறில்லை . வணிக நோக்கத்தில் தவறே இல்லை தான் . இரண்டு படம் எடுத்து பணம் பண்ணுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லவே இல்லை .. ஆனால் இரண்டும் இரு முழுமையான படங்களாக இருக்க வேண்டுமல்லவா ? இரண்டு படத்திற்கு தேவையான கதை வேண்டுமல்லவா . கதாபாத்திரங்களை நிறுவுவதற்கு மட்டும் ஒரு படம் , மீதி சம்பவங்களை சொல்ல இன்னொரு படமா ? இப்படி ஒரு சினிமா வியாபார உத்தியை எங்குமே கேள்விப்பட்டது இல்லையே . இதிலெல்லாம் மிகப்பெரிய காமெடி WKKB என்றதொரு மொக்கையான கேள்வியை தேசிய ட்ரெண்ட் ஆக்கியது . மோடியின் scripted ட்ரெண்டிங்கிற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் இந்த கதையை அணுகியதால் மட்டுமே இத்தனை தேவையில்லாத கதை சரடுகளை நுழைக்க வேண்டி வந்துள்ளது என்பது எனது அனுமானம் .

இரண்டாவது படத்தை வெறுக்க செய்த விஷயம் இத்தனை inhuman ஆன ஹீரோயிசம் . ஒரு அளவு வேண்டாமா ? இது விஜயகாந்த் படமோ பாலகிருஷ்ணா படமோவாக இருந்தால் பரவாயில்லை . இந்திய அளவில் ஹாலிவுட்டுக்கு நிகரான படமென்று விளம்பரம் செய்யப்படும் படத்தில் இவ்வளவு illogical ஆன ஹீரோயிசம் வேண்டுமா ? அதில் உச்சம் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் . அந்தரத்தில் உருளை அமைத்து பல அடி தூரத்தில் சென்று விழுகிறார்களே , கொஞ்சம் யோசித்து பாருங்கள் , அந்த கேடயத்தை பிடித்திருக்கும் கைகள் என்னவாகுமென்று ? அந்த போர் வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறாதவர்கள் வேறு . கில்லியில் ஹீரோ 300 பேருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிப்பது , கத்தியில் 50 பேரை அடிப்பது போன்ற காட்சிகளும் மிகைப்படுத்த பட்டது தான் . ஆனால் அந்த திரைக்கதையில் எவ்வளவு புத்திசாலித்தனம் இருந்தது . பாகுபலியின் பலமே  இதில் இடம் பெரும் போர் காட்சிகள் தான் . காளகேயர்களுடனான போரில் எரிபொருள் தடவிய துணியை உபயோகித்தது , எருமை மாடுகளை கொண்ட போர்காட்சி , அணையை உடைப்பது போன்றவை எல்லாம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருந்தது, எனில் இறுதிக்காட்சி,... சத்தியமாக சொல்கிறேன் ஒத்துக்கொள்ள  முடியவில்லை . ஏழாம் அறிவுக்கு நடந்த அதே கதி  தான் இந்த காட்சிகளுக்கும் .

மூளையை கழட்டி வைத்து விட்டு இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஓடி விடுங்கள் . நான் எதற்கய்யா மூளையை கழட்டி வைக்க வேண்டும் . எனது மூளையை திசை திருப்ப வேண்டியது அந்த திரைக்கதை ஆசிரியனுடைய வேலை அல்லவா? படத்திற்கு வரும்போதே மூளையை கழட்டி வைத்து வாருங்கள் என்று ஒரு திரைக்கதை ஆசிரியன் / இயக்குனர் சொல்வாராகில் அதன் பேர் தடித்தனம் . நான் மூளையை கழட்டி வைக்க வேண்டுமென்றால் உனக்கெதற்கு இந்த ஆள் அம்பு சேனை 300கோடி பணம் எல்லாம் ? இன்செப்ஷன் போன்ற படங்கள் எப்போது இந்தியாவில் வரும் என்று அமீர் கானிடம் கேட்ட போது , அவர்கள் மூளையை நன்றாக உபயோகித்து படம் பார் என்கிறார்கள் , நாமோ மூளையை கழட்டி வைத்து விட்டு படம் பார்க்க சொல்கிறோம் என்றார்.

பாகுபலியில் கவரக்கூடியது இதன் கிராபிக்ஸ் காட்ச்சிகள் தான். நிச்சயமாக இதன் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞ்சர்களின் உழைப்பும் நேரமும் கொட்டிக்கிடக்கிறது .அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த பாராட்டுக்கள். யு கைஸ் டிசர்வ் எ ஸ்தாண்டிங் ஓவேஷன் . பிக் சல்யூட் .

எந்த ஒரு கதைக்கும் ஒரு அரசியல் இருக்கும் . பாஹுபலிக்கும் அது இருக்கிறது . அத ஜஸ்ட் லைக் தாட் கடந்து சென்று விட முடியாது .

"தலித் மக்கள் மேல பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருக்குங்க .. என்னடா இவனுங்க எப்ப பாத்தாலும் ஜாதி ஜாதின்னு பேசினு இருக்காங்க , இவங்களுக்கு வேற பிரச்சனையே இல்லையா ? நான் சாத்தியமா சொல்றேங்க எனக்கு ஜாதி ஒன்னு தான் பிரச்சனை . நான் எங்க போனாலும் என் ஜாதி என் கூடவே வரும் . "

விகடன் மாணவ பத்திரிக்கையாளர் கேள்வி பதில் நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது .

கொஞ்சம் கூட மனித தன்மையோ ஈவு இரக்கமோ அற்ற செயல்களை கலாச்சாரம் என்ற பெயரில் போற்றி பாதுகாக்கும் கயவாளித்தனமான தேசம் இது. இங்கே இந்த மனு அரசியல் எந்த ரூபத்தில் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அதை நொண்டி நொங்கெடுக்க வேண்டியது ஒரு பகுத்தறிவாளனின் கடமை . அதனால் இது போன்ற ஒரு வணிக படத்தை முன்வைத்து இப்படி ஒரு கருத்து தேவையா என யாரும் நினைக்க வேண்டாம் .

தமிழ் நாட்டில் தான் ஜாதி பெயரை பேருக்கு பின்னால் வழக்கம் கிடையாதே , அப்புறம் என்னய்யா பல்வாள் "தேவன்" பிக்காளி "தேவன்" ?? காளகேய மொழி ஒன்றை உருவாக்கியவர்களுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா ? இது ராஜமௌலிக்கு தெரியவில்லை பாவம் என்றால் மதன் கார்க்கிக்கும் தான் தெரிய வில்லையா ?

மீண்டும் மீண்டும் பாகுபலி சத்திரிய தர்மம் தர்மம் என்று கொக்கரிக்கிறாரே ? அந்த தரும கருமத்தை வைத்து தான் இந்த நாட்டில் இவ்வளவு அடிமை படுத்துதல் நடந்தது . அதை கூவி கூவி விற்கும் ஒருவனை கதாநாயகனாக காட்டுவதன் மூலம் ராஜமௌலி என்ன சொல்ல வருகிறார் . மனு தர்மம் எனும் அயோக்கியத்தனத்திற்கு விளக்கு பிடிக்கும் வேலையில்லாமல் வேறென்ன இது?

இதற்க்கெல்லாம் உச்சமாக கட்டப்பா கதாபாத்திரம் . தான் ஒரு அடிமை என்பதையே மீண்டும் மீண்டும் தனக்கு தானே கூறி புளங்காகிதம் அடையும் ஒரு கதாபாத்திரம் . வார்த்தைக்கு வார்த்தை தான் ஒரு அடிமை என்பாராம் . தன சொந்த மூளையை கொஞ்சம் கூட உபயோகிக்க மாட்டாராம் , பிஞ்சு குழந்தையின் காலை கூட தலையில் தூக்கி வைத்துக்கொள்வாராம் . மாவீரன் பாகுபலி சத்திரியன் என்றால் அவன் குடும்பத்துக்கு அடிமையாக வேலை செய்யும் கட்டப்பா எந்த தருமத்தை கடை பிடிக்க வேண்டியவன் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .இந்த கட்டப்பா வை பல்வாள் தேவன் அவமான படுத்துவதை விட பாகுபலியே அதிகமாக அவமான படுத்துகிறான் . பாகுபலி தன்னிடம் காட்டும் கரிசனத்தை கண்டு உச்சி குளிர்ந்து போகிறார். ஒருவன் தன்னிடம் கரிசனம் காட்டுவதே பெரும் பேரு  என்று ஒரு மனிதன் நினைக்கிறான் என்றால் அவனுக்குள் எவ்வளவு மானங்கெட்ட தன்மை இருக்கும் . அய்யா பாகுபலிக்களே , கட்டப்பக்களுக்கு தேவை உங்கள் கரிசனமோ  அன்போ கிடையாது , அவர்களின் தேவை மரியாதை தான் . உன் கரிசனத்தை குப்பையில் போடு . ஒருவேளை கட்டப்பா உன் குழந்தையை தூக்க மறுத்திருந்தால்? உன்னுடன் கூட்டு சேர்ந்து போரிட மறுத்திருந்தால் ? அப்போதும் உன் எதிர்வினை இப்படி தான் இருக்குமா ?

இரண்டு  வருடங்களுக்கு முன் காட்சி பிழை இதழிலோ அந்தி மழை இதழிலோ வாசித்த ஒரு கட்டுரையில் வாசித்த  கருத்து தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவை , ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் கூட்டமாக ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே பிஜேபி ஆஎஸ்எஸ் போன்ற அமைப்புகளின் 60 ஆண்டு கால ஆசை . ஆனால் அது அவர்களுக்கு நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது . எனில் மொத்த இந்தியாவும் பாகுபலியை கொண்டாடுவதன் மூலம் அவர்களால் சாதிக்க முடியாததை அவர்கள் ஆட்சி காலத்திலேயே சத்தமே இல்லாமல் சாத்தித்து காட்டியிருக்கிறது பாகுபலி

நண்பர்களே, தயவு செய்து ஒரு படத்திற்காக அதிகமாக கூவுகிறேன் என்று நினைக்க வேண்டாம் . மேலே கூறியது போன்ற விஷயங்களை பாகுபலி போன்ற அனைத்து மக்களுக்கும் சேரும் படத்தில் எந்தவொரு கூசலும் இல்லாமல் காட்டுகிறார்கள் , நாமும் அதை பற்றின சுரணையே இல்லாமல் பார்த்து வருகிறோம் என்றால் நமக்குள்ளும் அந்த மனநிலையே இருக்கிறதுஎன்று அர்த்தமல்லவா ? அதை சுட்டி காட்டியே ஆக வேண்டும் என்பதாலே குறிப்பிடுகிறேன் .

கடைசியாக,  கடந்த ஒரு சில வருடங்களாக சினிமாவை பயில முயற்சி செய்யும் ஒரு மாணவனாக சொல்கிறேன். சினிமாக்காரனும் அடிப்படையில் ஒரு கதை சொல்லி மட்டுமே . அந்த கதையின் மூலம் அவன் அரசியல் பேசுகிறானா பொழுது போக்குகிறானா அல்ல வேறேதும் முயல்கிறானா என்பது இரண்டாம் பட்சமே , ஆனால் கதை சொல்லியே ஆக வேண்டும் . அதற்காக அவன் பயன் படுத்தும் கருவிகள் மட்டுமே மற்ற ( பணம் , தொழில்நுட்ப கலைஞ்சர்கள் ) அனைத்தும். பாகுபலியின் தொழில்நுட்பத்தின் மீதான மிரட்ச்சியால் படத்தை
 கொண்டாடுபவர்கள் சினிமா என்னும் கலையை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் .

Tuesday, 4 April 2017

சத்திய சோதனைகடந்த ஜனவரி 30 அன்று நண்பர் கருந்தேள் ராஜேஷின் ஒரு பதிவை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அவர் எப்படி தத்தியாக இருந்தார் அதன் பின் எவ்வாறு தன்னை மாற்றி கொண்டார் என்பதை பற்றின பதிவே அது . படிக்க படிக்க விறுவிறுவென இருந்தது, ஏனெனில் நீண்ட நாட்களாக தேளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அவரது புரிதல், maturity , genius ஐ பார்த்து மிகவும் வியந்துள்ளேன் . அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் தத்தியாக இருந்து மூன்றே வருடங்களில் தன்னை மாற்றிக்கொண்டார் என சொன்னபோது தொற்றிக்கொண்ட ஆர்வமே . தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு காரணம் ஒரு புத்தகம் என்றும் குறிப்பிட மனதிற்குள் என்ன புத்தகமாக இருக்குமென ஓடிக்கொண்டிருந்தது . இறுதியில் அந்த புத்தகத்தின் பெயரை அறிந்த பொது ஆச்சிரியம் இருமடங்கானது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் சுயசரிதையான சத்திய சோதனையே அது. அவ்வளவு காலம் யார் மீது மிகுந்த விமர்சனங்கள் வைத்தோமோ  அவருடைய சுய சரிதை தான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையை மாற்றியிருக்கிறது என்று தெரிந்ததுமே முதல் வேலையாக அமேசானில் ஆர்டர் செய்தென். காந்தி பிறந்த மண்ணான குஜராத் அகமதாபாத்தில் இருந்து அந்த புத்தகம் ஷிப் ஆகி வருவதை ட்ராக் செய்வதே உற்ச்சாகமான அனுபவமாக இருந்தது (கொஞ்சம் ஓவரா தெரியுதோ :D)

புத்தகம் கிடைத்தவுடனே அப்போது வாசித்துக்கொண்டிருந்த விநாயக முருகனின் வலம் நாவலை  கிடப்பில் போட்டுவிட்டு இதை துவங்கினேன். 

நிச்சயமாக நண்பர்களே... அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் . அதிலும் பெரியார் அபிமானிகள் இதை விருப்பு வெறுப்பின்றி படித்தே ஆக வேண்டும் . ஏனெனில் நான் பெரியார் சிந்தனை பள்ளியை சேர்ந்தவன் . அதனாலேயே பெரியார் அபிமானிகள்  விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டும் என்று சொல்கிறேன் . 

நாம் அனைவருக்குமே காந்தி மீது ஒரு சிறிய வெறுப்பு இருக்கும் . அல்லது காந்தியை குறை கூறுவதை ஸ்டைல் statement ஆக வைத்திருப்போம் . காந்திதிக்கு இருந்த , அல்லது இருந்ததாக கேள்விப்பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மீதான ஒவ்வாமையே அதற்க்கு காரணமாக இருக்கும். அவரது சுய சரிதையை வாசிக்கும்போது இந்த பிம்பங்கள் நிச்சயமாக உடையும் . நிச்சயமாக அவரும் நம் பெரியாருக்கு நிகரான ஒரு ஆளுமையே . பெரியார் ஒரு superman என்றால் காந்தி ஒரு batman . சூப்பர்மேன் நார்மல் மனிதன் கிடையாது . இயல்பிலேயே superhumen சக்திகள் கொண்டவன், அதுபோல் பெரியார் பிறப்பிலேயே ஒரு ஆல்பா . ஒரு மிக உறுதியான கருத்தாளனாக , சமூக போராளியாக மாறுவதற்கு முன்பே அசாதாரணமான குணநலன்களை கொண்டிருந்தவர். எந்தவிதமான சமூக கட்டுகளுக்கும் மாஸ் ஹிஸ்டிரியாவுக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர். அவரது பால்ய காலத்தை பற்றி வாசிக்கும்போது ஒரு 'என்னமோ போடா மாதவா' attitude  காணக்கிடைக்கும் . புத்தரும் கவுண்டமணியும் சேர்ந்த கலவை பெரியார். be  like bro வின் thug life போன்றது அவரது வாழ்க்கை.

ஆனால் ஒரு சாதாரண மனிதன் பெரியாராக முடியுமா? மிகவும் கடினம். ஒருவன் பெரியார் சிந்தனை பள்ளியின் மாணவன் ஆகலாம் . புத்தரின் சீடர்கள் மீண்டும் லைகீக வாழ்க்கைக்குள் திரும்பிய பின் எப்படி வாழ்ந்திருப்பார்களோ அது போல் பெரியார் அபிமானிகளால் வாழமுடியும். ஆனால் அந்த சீடர்கள் எப்படி புத்தரில்லையோ அது போலவே நாமும் பெரியார் ஆக  முடியாது.

இங்கு தான் காந்தியின் ஆளுமை முக்கியமாதாகிறது . காந்தி இயல்பில் ஒரு ஆல்பா அல்ல. அவர் முழுக்க முழுக்க self  made personality . ப்ருஸ் வெய்ன் பேட்மேன் ஆனது போல் கடும் முயற்சிகள் மேற்கொண்டு காந்தி மகாத்மா ஆகிறார். 

சிறு வயதில் காந்தி ஒரு பயங்காளி . கூட்டத்தில் பேசுவதென்றால் பயம். பெரியவர் பேச்சை ஏன் எதற்க்கென்று கேள்வி கேக்காமல் அப்படியே கடைபிடிக்கும் பழக்கமுடையவர் (இந்த இடத்தில் நமது பகுத்தறிவு பகலவன் தன் சித்தி வீட்டில் அடித்த லூட்டிகளை ஒப்பிட்டு பாருங்கள்  ). மனைவியை சந்தேகித்து torture செயகிறார். செக்ஸ் ஐ enjoy செய்வதில் குற்றவுணர்வு கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு தேடல் மட்டும் அவருக்குள் இருக்கிறது. எவ்வளவு நகைப்புக்கு உள்ளானாலும் சரி, தனது செயல்களை தொடர்ந்து ஒரு சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார். தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் கூர்ந்து கவனிக்கிறார். அதற்கான பிரதிவினையை ஆராய்கிறார் . தனது மனமும் அறிவும் எதை சரி என்று சொல்கிறதோ அதற்க்கேற்றவாறு பிரதிவினைகளை மாற்றிக்கொள்கிறார். இந்த குணாதிசயம் தொடர தொடர சொந்தமாக முன்னெடுப்புகள் எடுக்கவும் தொடங்குகிறார். முன்னெடுப்புகள் தோல்வி அடையும் போதும் நாம் சாதாரண மனிதர்கள் செய்வது போல அலுத்துக்கொள்ளவும் செய்கிறார். வாழ்க்கையையே ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ஆக வாழ்கிறார். 

காந்தியின் இந்த சமவயதை பெரியாருடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரியாருக்கு இது போன்ற பிரக்ஞ்சைகள் எதுவுமே இருக்காது. மனம் போன போக்கில் வாழ்க்கையை ஜாலியாக கழித்துக்கொண்டிருப்பார். காந்திக்கு தனக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் தெரிந்திருக்கிறது . மிக கவனமாக வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனதுடன் எதிகொள்கிறார். 

நமது ஆளுமையை  மாற்றவேண்டும் என்று பிரயத்தனப்படும் அனைவருக்குமே , தனது சக்த்திக்கு மீறிய விஷயங்களை கையாள்வதில் ஒரு மனப்போராட்டம் இருக்கும் . வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் விடா முயற்சியால் வாழ்வின் போக்கை மாற்ற முயலும் மனப்பாங்கையும் சரியாக balance செய்யும்போதே ஒரு மனிதன் ஆல்பாவாக , தலைவனாக , ஆளுமையாக மாற முடியும். இந்த இடத்திலேயே ஒரு சாதாரண மனிதனுக்கு காந்தி முன்னுதாரணமாகிறார். நாங்கள் உங்களை எவ்வளவு தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி, காந்தியால் மகாத்மாவாக முடியுமென்றால் உங்களாலும் உங்கள் ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியும் . இதை ஒரு துளி கூட அவரை தரம் தாழ்த்தி சொல்லவில்லை, நம்மை போன்ற ஒரு சகமனிதரின் பயணத்தை வியந்து பார்த்து சொல்கிறேன் . 

சுய முன்னேற்ற நூல்களை படித்து அதன்படி மாற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் காந்தியை படியுங்கள். நாம் இப்போது முயல்வதை அந்த மனிதர் 130 ஆண்டுகளுக்கு முன்பே செய்து வெற்றி கண்டிருக்கிறார். அவர் நம்மில் ஒருவர். நமது சகபயணி , தொடர்ச்சியான முயற்சிகளுக்கு என்றுமே பலன் கிடைக்காமல் போகாதென்பதை நம் காதுகளில்  அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

பின்குறிப்பு : ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை பார்க்கவில்லையென்றால் உடனே பாருங்கள். அந்த படத்தில் காந்தியை தீவிரமாக வாசிக்கும் சஞ்சய் தத்துடன் காந்தி வந்து உட்காந்துக்கொள்வார். நண்பனாக வழிகாட்டியாக வருவார். சத்திய சோதனை படித்த பின்பு நம்மாலும் அந்த அனுபவத்தை உணர முடியும் 

Friday, 4 October 2013

VIKATAN MARKS ( ? / 100 )


விகடன் மதிப்பெண்கள் 

28 மதிப்பெண்கள் :-
   
    *மாயாண்டி

36 மதிப்பெண்கள் :-

    *மேதை

37 மதிப்பெண்கள் :-

    *அன்னக்கொடி

    *அலெக்ஸ் பாண்டியன்
 
    *மூன்று பேர் மூன்று காதல்

    *தேசிங்கு ராஜா

    *சுறா

38 மதிப்பெண்கள் :-

    *சொன்னா புரியாது

    *பட்டத்து யானை

    *முத்திரை

    *போட்டா போட்டி

    *வெளுத்துக்கட்டு

39 மதிப்பெண்கள் :-

    *தாம் தூம்

    *அம்மாவின் கைபேசி

    *குட்டிப்புலி

    *வித்தகன்

    *உயர்திரு 420

    *அம்பாசமுத்திரம் அம்பானி

    *வெடி

40 மதிப்பெண்கள் :-

    *அமீரின் ஆதி பகவன்

    *தாண்டவம்

    *நீதானே என் பொன்வசந்தம்

    *நியூட்டனின் மூன்றாம் விதி

    *சகுனி

    *கிருஷ்ணவேணி பஞ்சாலை

    *லீலை

    *மை

    *டூ

    *காதல் சொல்ல வந்தேன்

    *வனயுத்தம்

    *எத்தன்

    *மகிழ்ச்சி

41 மதிப்பெண்கள் :-

    *ஜெயம் கொண்டான்

    *தில்லு முல்லு

    *முகமூடி

    *துரோகி

    *கடல்

    *கேடி பில்லா கில்லாடி ரங்கா

    *கலகலப்பு

    *வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    *ஐந்து ஐந்து ஐந்து

    *தில்லாலங்கடி

    *யுத்தம் செய்

    *வெங்காயம்

    *மயக்கம் என்ன

    *இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்

    *கோரிப்பாளையம்

    *குள்ளநரிக்கூட்டம்

    *பொன்னர் சங்கர்

    *நகரம் மறுபக்கம்

42 மதிப்பெண்கள் :-

    *மனம் கொத்தி பறவை

    *வத்திக்குச்சி

    *பாஸ் [எ] பாஸ்கரன்

    *போடா போடி

    *பச்சை என்கிற காத்து

    *மங்காத்தா

    *தீக்குளிக்கும் பச்சை மரம்

    *மாற்றான்

    *கண்ணா லட்டு தின்ன ஆசையா

    *சமர்

    *ஆதலால் காதல் செய்வீர்

    *தலைவா

    *ராட்டினம்

    *3

    *வம்சம்

    *காஞ்சனா

    *ரௌத்திரம்

    *அனந்தபுரத்து வீடு

    *முரண்

43 மதிப்பெண்கள் :-

    *சுண்டாட்டம்

    *தீயா வேலை செய்யணும் குமாரு

    *ஒரு கல் ஒரு கண்ணாடி

    *சிங்கம் 2

    *நேரம்

    *6 மெழுகுவர்த்திகள்

    *கும்கி

    *சென்னையில் ஒரு நாள்

    *எதிர் நீச்சல்

    *கோ

    *மரியான்

    *காஞ்சிவரம்

    *மௌனராகம்

    *மெரினா

    *நான்

44 மதிப்பெண்கள் :-

    *தடையற தாக்க

    *தங்க மீன்கள்

    *துப்பாக்கி

    *வானம்

    *சுந்தரபாண்டியன்

    *சாட்டை

    *வாகை சூட வா

45 மதிப்பெண்கள் :-

    *மதுபானக்கடை

    *ஹரிதாஸ்

    *சூது கவ்வும்

    *அட்டைக்கத்தி

    *நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

    *நந்தலாலா

46 மதிப்பெண்கள் :-

    *விஸ்வரூபம்

    *அரவான்

    *புதுப்பேட்டை

    *மொழி

    *ஆரண்ய காண்டம்

47 மதிப்பெண்கள் :-

    *அங்காடித்தெரு

50 மதிப்பெண்கள் :-

    *மூடர்கூடம்

    *;தெய்வத்திருமகள்

    *வேதம் புதிது

    *ஜென்டில்மேன்

51 மதிப்பெண்கள் :-

    *ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

53 மதிப்பெண்கள் :-

    *சொல்ல மறந்த கதை

54 மதிப்பெண்கள் :-

    *திரிசூலம்

56 மதிப்பெண்கள் :-

    *பரதேசி

59 மதிப்பெண்கள் :-

    *புதிய வார்ப்புகள்
   

Friday, 20 September 2013

VARUTHAPPADAATHA VAALIBAR SANGAM - NO SADNESS YOUNGSTER ORGANISATION

 


  படத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..

    "இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ..."

    எனக்கு என்னமோ சரிதான்னு படுது
    இதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..
    கௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..
     படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).
     இரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்வளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .
     ஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , "நான் கடவுள்" ராஜேந்திரனின்  பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (" வருத்தப்படாத வாலிபர் சங்கம் "  கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன்  படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )
       அடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . " ஊதா கலரு ", " பாக்காதே " போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .
       படத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே "சத்யராஜ் - சிவகார்த்திகேயன் " என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .
      இருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் 

Wednesday, 28 August 2013

MADRAS CAFE . . . ACTUALLY JAFFNA CAFE

       


         மெட்ராஸ் கபே ... நேர்மையான ஒரு ராணுவ அதிகாரியின் துப்பறியும் கதை . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஹிந்தி படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் . செம த்ரில்லர் படம் .
         படத்தை பற்றி ஏராளமான controversyக்கள் இருப்பதால் அதை பற்றின கருத்துக்களை கடைசியில் சொல்கிறேன் .
          ஆரம்பம் முதல் படம் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது . இந்திய RAW அதிகாரி ஜான் ஆப்ரஹாம் . இலங்கையில் இந்திய படைகளின் தோல்விக்கு சில தேச துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள் . அதை கண்டு பிடிக்கவும் , சில சர்வதேச காரணங்களுக்காகவும் ஜான் ஆப்ரஹாம் இந்தியாவில் இருந்து இலங்கை அனுப்ப படுகிறார் . அங்கு அவர் நடத்தும் விசாரணைகள் அவரை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது . அதனால் அவர் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவையே படம் . 
         படத்தின் மிக பெரிய வெற்றியே கதை சொல்லப்பட்ட விதம் தான். படத்தின் கதை நம் முன்னாள் பிரதமரின் கொலை பற்றியது . ஏற்க்கனவே பல மொழிகளில் பலவாறு பிரித்து மேயப்பட்ட கதை . இருந்தும் படம் செம்ம விறுவிறுப்புடன் செல்ல காரணம் படம் சொல்லப்பட்ட point  of  view  . கதை முழுக்க முழுக்க ஒரு RAW அதிகாரியின் பின்னாலேயே செல்கிறது . நம் எல்லோருக்கும் இலங்கையில் நடந்து போர் பற்றி தெரியும் . அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொல்லப்பட்டதும் தெரியும் . அது எப்படி  நடந்தது என்றும் பார்த்துள்ளோம் . இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கொலையாளிகள் வாயிலாக பார்த்தல் தானே  எந்த சஸ்பென்சும் இல்லாமல்  சப்பையாக இருக்கும் . ஆனால் ஒரு கொலை நடக்கப்போகிறது என்றே தெரியாமல் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வந்த ஒருவர் படிப்படியாக அந்த கொலையை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கும் அந்த திரில் ஒட்டிக்கொள்ளும் தானே . அது தான் திரைக்கதையின் வெற்றி . கொலைக்கான காரணங்களை வெறுமனே உணர்வு ரீதியாக ப்ரெசண்ட் செய்யாமல் நிஜமாகவே இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் சர்வதேச அரசியலை தைரியமாகவும் , தெளிவாகவும் , விறுவிறுப்புடனும் திரையில் கொண்டுவந்த இயக்குனர் சூஜித் சிர்க்காருக்கு hats  off . படம் ஆரம்பம் முதலே ராஜீவ் கொலைக்கு எத்தனை நாள் முன்பு நடக்கிறது என்பதை வைத்து தான் விளக்கப்படுகிறது . இருந்தாலும் பாதி படத்திற்கு பிறகுதான் நாம் கொலைக்கான காரணங்களுக்கே வருகிறோம் . அதாவது நாம் எதை மனதில் வைத்து கதையுடன் பயணிக்கிறோமோ , அதையே மறக்கடிக்கசெய்து , நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த  விஷயத்திற்கு திருப்பி கொண்டு வருகிறார்கள் . எனவே நமக்கு பழக்கப்பட்ட கதையை பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் புதிய திரில்லர் பார்ப்பது போல் உள்ளது . அதே போல் எதிரிகளின் இன்டர்செப்டுகளை, டீகோட் செய்யும் இடங்களும் செம இன்டலிஜென்ஸ் ...  சோம்நாத் டே , சுபெண்டு பட்டாச்சார்யா வின் திரைக்கதை அவ்வளவு பவர்புல் . 
          ஜான் ஆபிரகாம் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு . எந்த நேரத்திலும் அசராமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய துடிக்கும் அதிகாரியாக வருகிறார் . அந்த இடம் , இந்த இடம் என்றில்லாமல் எல்லா படம் முழுக்கவே இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் . ஆனால் படத்திலேயே சிறந்த நடிப்பு பாலா கதாபத்திரதினுடையது தான் . பிரகாஷின் அருமையான நடிப்பு. முக்கியமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் செம்ம கெத்து . ஜானின் மேலதிகாரியும் ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு அழும் அந்த காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார் . 
         படத்தில் இடம் சார்ந்த detailing அவ்வளவு நேர்த்தியாக உள்ளது . LTF (Lankan  Tamil  Front )ன் பேஸ் கேம்ப் செல்லும் வழி எல்லாம் நிஜமாகவே காட்டிற்கு செல்லும் feelling கொடுக்கிறது . யாழ்பாணம் , சென்னை , மதுரை , லண்டன் , சிங்கப்பூர்  என பறந்து பறந்து செல்லும்  கதையில்  எங்குமே சிறிதும் குழப்பம் இல்லாமல் நம்மால் கதையுடன் பயணிக்க முடிகிறது .
         மிகவும் கவனிக்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவு . ஒளிப்பத்வாளர் கமல்ஜீத் நேகி படத்தின் இந்த டோனை கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளார் . அதிலும் ஆரம்பத்தில் வரும்  அந்த போர் காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது . படத்தில் பாடல்கள் திணிக்கபடாதது பெரும் சந்தோஷம் , எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் இந்த படத்தில் அது ஸ்பீட் ப்றேக்கராகவே இருந்திருக்கும் . ஆனால் பின்னணி இசை சில இடங்களில் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கலாம் . 
        படத்தில் நான் காணும் சில குறைகளும் உள்ளன  . மொழி சார்ந்த detailing  படத்தில் மிகவும் மோசம் . நன்றாக ஹிந்தி பேசும் ஈழத்தமிழர்கள் யாருமே ஈழத்தமிழ் பேசவில்லை . கொலையாளிகள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் அவர்கள் பேசும் சில டயலாக் ஈழத்தமிழ் தானா , இல்லை மலையாளமா என்று சந்தேகமாக உள்ளது . அதே போல் கதை நடப்பது 1990களின் தொடக்கம் . ஜான் ஒரு பெட்டிக்கடையில் நின்று பேசும்போது அங்கு ஒரு குமுதம் சிநேகிதி இதழ் தொங்க விடப்பட்டுள்ளது . அதன் அட்டையில் நடிகை சிநேகா படம் உள்ளது . சிநேகா 2001ம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வந்த "விரும்புகிறேன் " படத்தில் அல்லாவா அறிமுகம் ஆனார் . .... இது போன்ற சின்ன சின்ன தவறுகள் வராமல் பார்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் செம்மையான த்ரில்லர் படம் . டிக்கட் காசு வீணாக போகாது .. 


        படம் பற்றின controversyக்கள் . . .


        படத்தில் யாரை பற்றியும் திணிக்கப்பட்ட  சித்தரிப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றியது .
        கிளைமாக்சில் ஜான் ரபீந்தரநாத் தாகூரில் கீழ்கண்ட வரிகளை சொல்கிறார் .

             " Where the mind is without fear and the head is held high 
               Where knowledge is free 
               Where the world has not been broken up into fragments 
               By narrow domestic walls 
               Where words come out from the depth of truth 
               Where tireless striving stretches its arms towards perfection 
               Where the clear stream of reason has not lost its way 
               Into the dreary desert sand of dead habit 
               Where the mind is led forward by thee 
               Into ever-widening thought and action 
               Into that heaven of freedom, my Father, let my country awake  "


           மொழி பற்றின குறுகிய உணர்வில்லாமல் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று வாழ்பவர்களுக்கு இந்த படத்தை எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே என் கருத்து 

Wednesday, 14 August 2013

CHENNAI EXPRESS - DON'T UNDERESTIMATE OKEYYY..

       


            சென்னை எக்ஸ்பிரஸ் கதை சுருக்கத்தை புதிதாக சொல்ல தேவையில்லை .. படம் வெளிவரும் முன்னே எல்லோரும் அறிந்ததே .
           இருந்தாலும் சுருக்கமா சொல்லிடுறேன் .. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைப்பதாக பாட்டியிடம் பொய் சொல்லி விட்டு கோவா செல்லும் ஷாருக் தீபிகாவால் ஏற்படும் குழப்பத்தால் தமிழகத்திற்கு வர வேண்டி வருகிறது .. அங்கே ..  (சாரி) இங்கே நடக்கும் பிரச்சனைகள், அதை ஷாருக் நேரிடுவதே படம் ..
             படத்தை பார்க்கும் முன் நீங்கள் தமிழாரக இருந்தால் , அதை சுத்தமாக மறந்து விடவும் . உங்களை ஒரு ஹிந்திகாரராக நினைத்துகொண்டு படம் பார்த்தால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும் .
               படத்தின் எல்லா தளங்களிலும் ப்ளஸ் , மைனஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால் படத்தின் ப்ளஸ் எது மைனஸ் எது என்றே பார்த்து விடலாம் .
             
                படத்தின் முதல் ப்ளஸ் ஷாருக் .. இது முழுக்க முழுக்க ஷாருக் ரசிகர்களுக்கான படம். நீங்கள் ஷாருக் ரசிகராக இருந்தால் என்னதான் சினிமாத்தனம் அதிகம் என்று சொன்னாலும் படத்தை ரசிப்பீர்கள் . ஷாருக் பற்றி சொல்லும்போது திரைக்கதையில் ஷாருக்கின் கதாபாத்திரமும் சரி அதை ஷாருக் ப்ரெசண்ட் செய்திருக்கும் விதமும் சரி மிகவும்  நேர்த்தியாக இருக்கிறது , எப்படிஎன்றால் படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கு உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக ஷாருக் பாத்திரத்திற்கு உழைத்துள்ளனர் .. ஆரம்பம் முதலே தீபிகா மீதோ, தாத்தா மீதோ எந்த பிணைப்பும் இல்லாமல் சுத்திக்கொண்டு இருக்கிறார் , ஆனால் காதல் மலர்ந்த பிறகு எதிரிகளை பின்னி பெடலெடுக்கிறார் .( நிஜமாலுமே காதலால் இதுபோன்ற ஜிகினாதனங்களை செய்ய முடியும் தானே .. ) ஆரம்பம் முதலே அவர் சொல்லி வரும் "dont underestimate the  power of a common men " என்ற டயலாக் பல நேரங்களில் அவருடைய செயல்பாடுகளை justify செய்ய உதவுகிறது . அடுத்ததாக ஷாருக்கின் screen presence .. அவருக்கென்றே வார்த்தெடுத்த அச்சு என்பதால் அருமையாக fit ஆகி போகிறார் .. எதிரிகளை கண்டு பயந்து நடுங்கும்போது அவர் கொடுக்கும் வாய்ஸ் மோடுலேஷன் .. " a typical SRK stroke " . என்னதான் லாஜிக் இடித்தாலும் அவருடைய பழைய பாடல் வரிகளை பாடியே தீபிகாவுடன் ரகசியமாக பேசுவது செம்ம செம்ம . இதில் கவனிக்க வேண்டிய வேறொரு விஷயம் இது போன்றதொரு கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகர் செய்தாலும் நம்மால் இந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியாது என்பதே .. எதிரிகளுக்கு பயந்து நடுங்கும் நடிகராக சல்மானோ , ரஜினியோ , விஜயோ எல்லாம் நடிக்க மாட்டார்கள் ( நடிக்க முடியாது )... அப்படி நடித்தால் ( ரன்பீர் , நம்ம ஆர்யா ) இறுதியில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் படத்துடன் ஒட்டாது .. ஆனால் இது ரெண்டையும் சேர்த்து (ஒரே படத்தில் ) செய்ய முடிந்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ஷாருக் மட்டுமே . அதுதான் நம்ம king khan .
                 தீபிகாவின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது . சும்மா ஆடிக்கும் அம்மாவாசைக்கும் வராமல் கதையுடன் பயணிகிறார் . சுதந்திரத்தை விரும்பும் ஜாலியான பெண் கிராமத்தில் ஒரு பெரிய தலைக்கு பிறந்ததால் முடங்கி கிடக்க வேண்டி வருகிறது . அதை எதிர்த்து அவர் போராடி ஓடிபோகும் போதும் கூட  ஜாலியாக ஷாருக்கை கலாய்த்துக்கொண்டே இருக்கிறார் . அவருடைய அந்த பாசிடிவ் attitude படத்தை என்டேர்டேயினிங் ஆக வைக்க பெரிதும் உதவுகிறது .
                  படத்தின் அடுத்த ப்ளஸ் எங்கும் நிக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் திரைக்கதை . லாஜிக் சறுக்கல்களை ரசிகர்களின் அளவிற்கு கூட சட்டை செய்யாமல் அடுத்து அடுத்து என்று பாய்ந்து சென்று கொண்டே இருக்கிறது .
               

                 படத்தின் மைனஸ் பாயிண்டுகள் நிறைய. வேகமான திரைக்கதையுடன் ஒன்ற வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தென்னகத்தின் புவியியலை  பற்றி கொஞ்சமும் தெரியாதவராக இருக்க வேண்டும் . ஒரு இடத்தில் கூட படத்தின் கதைக்களம் ஒரு தமிழக கிராமம் என்று நம்ப முடியவில்லை .
                 படத்துடன் ஒன்ற வேண்டுமெனில் உங்களுக்கு தமிழும் தெரிந்திருக்க கூடாது . தீபிகாவும் அவரது சொந்தங்களும் பேசும் தமிழ் நிஜமாகவே கடுப்பை வரவழைக்கிறது . பெரிய தல உட்பட எல்லா கதாபத்திரங்களையும் ஹிந்தி நடிகர்கள் செய்திருந்தால் கூட எல்லாருடைய தமிழும் synchronize ஆகி இருக்கும் , ஆனால் இங்கே ஒரு பக்கம் சத்யராஜ் " என்னம்மா கண்ணு ", "அட எழவு " என்று பிச்சு எடுக்க மத்த நடிகர்கள் தமிழையே பிச்சு எடுக்கிறார்கள் . தென்னிந்தியரான ரோஹித் ஷெட்டியே இதில் கோட்டை விட்டிருப்பதுதான்
வருத்தம் .
                 சத்யராஜின் கதாபாத்திரம் இன்னும் strong ஆக அமைக்க்கபட்டிருக்க வேண்டும் .. அப்படி இல்லாததால் கடைசி வரை வில்லன் மீது பயமும் வரவில்லை இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் சந்தோஷமும் வரவில்லை.
                   படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் technical  side .. அதை சொல்ல தேவை இல்லை . படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் . (முக்கியமாக ஆர்ட் டைரக்ஷன் )
                    பாடல்கள் ஓன்று கூட மனதில் நிற்காதது அடுத்த மைனஸ் . பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான் .
                    லுங்கி டான்ஸ் நிச்சயமாக தமிழர்களை கவர வைக்கப்பட்டுள்ளது தான் . ஆனால் படம் முழுவதையும் ஹிந்தி ரசிகர்களுக்காக எடுத்து விட்டு கடைசியில் ஒரு லுங்கி டான்சை திணித்தது சற்றும் போணி ஆகவில்லை .. நிஜமாகவே தமிழர்களை கவர கொஞ்சமாவது தமிழகத்தை பற்றி கொஞ்சமாவது ground  work  செய்திருக்கலாம் .
                    ஒரு நல்ல என்டர்டைனர் படம் தான் . கொஞ்சம் திரைக்கதையிலும் நிறைய technical side லும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் பட்டய கிளப்பி இருக்கும் . ஷாருக் , மற்றும் கமர்ஷியல் பட ரசிகர்கள் நம்பி படம் பார்க்க போகலாம். 

Sunday, 28 July 2013

GILLI - KAPADI KAPADI KAPADI

      
        ரொம்ப நாளைக்கு பிறகு சூர்யா டீவியில் கில்லி படம் பார்த்தேன். நான் தியேட்டரில் பார்த்து மிகவும் ரசித்த படம் என்றால் அது கில்லி தான் . ஸோ கில்லி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது . 
       2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , என் அக்கா 10த் முடித்து விட்டு  +1ற்கு  தாராபுரம் st.aloysius பள்ளியில் சேர்ந்து இருந்தார். அக்காவின் முதல் ஹாஸ்டல் அனுபவம் . அக்காவை பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் உட்கார்ந்திருந்த பொது நானும் அம்மாவும் ஒரே அழுகை . அம்மா அக்காவிற்காகவும் நான் கில்லி படம் பார்பதற்காகவும். கொஞ்சம் நேரத்தில் அப்பா படம் பார்க்க கூட்டி சென்றார் . அது ஒரு டப்பா  தியேட்டர் , சரியாக பராமரிக்க படாமலும் இருந்தது . அம்மாவிற்கு தியேட்டருக்கு வரவும் பிடிக்கவில்லை , அந்த தியேட்டரும் பிடிக்கவில்லை. 
       அந்த வயதில் கில்லி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது . ஆனால் இன்று யோசித்தது பார்க்கும் போது படத்ததை பற்றின வேறு ஒரு பார்வை கிடைத்தது . நாம் மிகவும் ரசித்த ஒரு படத்தை பல நாட்களுக்கு பின் பார்த்தால்  கொஞ்சம் மொக்கையாக தோன்றும் , ஆனால் கில்லி விஷயத்தில் அப்படி இல்லை , அன்று எந்த ஆர்வத்துடன் பார்த்தேனோ இன்றும் அதே உற்சாகத்துடன் ரசித்தேன் . காரணம் அன்று புரியவில்லை , இன்று புரிகிறது . 
       படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் பாத்திர படைப்புகள்  . 
       சரவணா வேலு , படிப்பில் ஆர்வம் இல்லாமல் கபடி விளையாடி திரியும் பய்யன் . அநியாயம் நடப்பதை கண்டால் கோபப் படுவான் , இருந்தாலும் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடனும் ஜாலியாகவும் எதிர்கொள்ளுவான் . இந்த குணாதிசயங்கள் கடைசி வரை விஜயின் கதாபாத்திரத்தில்  பிரதிபலிக்கும் . உள்ளூர் கபடி டீம் முதல் பிரகாஷ் ராஜ் வரை தன்னை சீண்டுபவர்களிடம் எல்லாம் கோபப்படுவார், ஆனால் அப்பாவை பார்த்தால் பம்முவார் . தனலட்சுமி மீது தான் எடுத்துக்கொண்ட  responsibility காரணமாக அவருக்கு வேண்டியது எல்லாம் செய்வார் ஆனால் கோபப்பட வேண்டியபோது கோபப்படுவார் . 
       தனலட்சுமி கதாபாத்திரமும் அப்படியே ... சந்தோஷமாக வாழும் பெண் . தன்  குடும்பத்துடன் இருந்த பொது ஜாலியாக இருப்பார். பிரகாஷ் ராஜால் பிரச்சனை வந்த பிறகு அவருக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும் . விஜய் வீட்டின் சூழ்நிலை பிடித்தவுடன் பழைய துறுதுறுப்பு வந்து விடும் . 
       முத்துப்பாண்டி கதாபாத்திரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஓன்று 
படத்தின் மற்ற கதாபாத்திரங்களை விட முத்துப்பாண்டி கதாபாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும் . பிரகாஷ் ராஜை பார்த்து நாம் படம் நெடுக சிரித்துக்கொண்டு இருப்போம் , ஆனால் பிரகாஷ் ராஜ் செய்யும் வில்லத்தனம் சீரியஸாகத்தான் இருக்கும் . முக்கியமான தருணங்களில் தனலட்சுமி முத்துப்பாண்டியிடம் மாட்டி விட கூடாது என்ற பரபரப்பு நமக்குள் இருக்கும் . ஆனால் முத்துப்பாண்டி திரையில் தோன்றி விட்டால் நாம் குதூகலமாகி விடுவோம் . பிரகாஷ் ராஜின் நடிப்பும் இதற்கு ஒரு காரணம் , அவர் தவிர வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு effect வந்திருக்காது.
       மற்ற கதாபாத்திரங்கள் கூட நூல் பிடித்தாற்போல் அமைக்க பட்டிருக்கும் .
விஜய் தன அம்மாவை பற்றி 

       "அப்பாவுக்கு தெரியாம நிறைய துட்டு கொடுப்பாங்க , ஆனால் என்ன விட்டு மட்டும் கொடுக்க மாட்டாங்க"

        என்று சொல்லுவார், அதே போல் விஜய் வீட்டிற்கு ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வரும்போது கூட அம்மா கோபபட மாட்டார். விஜய்யின் அப்பா கதாபாத்திரமும் அந்த விறைப்பான சுபாவத்தை கடைசி வரையில் விடாது . விஜய் 5ம் வகுப்பில் fail ஆவது முதல் டிகிரி அரியரை சொல்லி திட்டுவது வரை அந்த விறைப்பு அப்படியே இருக்கும் . அவர் துடிப்பான நேர்மையான அதிகாரி என்றும் படத்தில் காட்டபட்டிருக்கும் , அதற்க்கு ஏற்றவாறு தான் தேடும் குற்றவாளி தன மகன் தான் என்று தெரிந்த பிறகு கூட அவர் முகத்தில் எந்த சலனமும் இருக்காது , குற்றவாளியை பிடிக்க வேண்டுமே என்ற முனைப்பு மட்டுமே இருக்கும் . விஜயின் தங்கை கதாபாத்திரத்தை நமக்கு எல்லோருக்கும் பிடித்திருக்கும். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக வந்த போது கூட அனைவரும் கில்லியின் பெயரை சொல்லியே அவரை அடையாளம் கண்டு கொண்டோம் . ஆரம்பம் முதல் அண்ணனோடு சண்டை போட்டு விட்டு , கடைசியில் அப்பாவிடம் அண்ணனுக்காக உருகி உருகி பேசுவார் . அவர் என்ன தான் சண்டை போட்டாலும் பிரச்சனை வரும்போது அண்ணனை விட்டு கொடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் . எப்படியென்றால் , ஒரு காட்சியில் தன வீட்டில் ஒரு பெண் அண்ணனால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்த போதும் அண்ணனை மாட்டி விட மாட்டார் . அதே போல அண்ணனின் காதலை கண்டு சந்தோஷ படுவார், பெரும்பாலான தங்கச்சிகள் அப்படித்தானே . மயில்சாமி - எப்போதும் தண்ணி அடித்துக்கொண்டு இருப்பார் , விஜயின் லோக்கல் ரசிகன், கடைசி வரை விஜயை ஹீரோவாகவே பார்ப்பார் . விஜயின் நண்பர்கள் கூட நம் நிஜ நண்பர்களை ஞாபகப்படுத்துவார்கள் , ஒரு உதாரணம் , கிளைமாக்ஸில் நாகேந்திர பிரசாத் விஜயிடம் கோபப்படுவார் . 
       " என்னமோ பெருசா  உடல் பலத்த விட மன பலம் தான் முக்கியம்னு பேசுன , இப்போ என்னடா ஆச்சு "
       " என் மனசே என்கிட்டே இல்லாடா "
         உடனே தோல்வியை மறந்து விட்டு விஜயின் காதலுக்காக கவலை பட தொடங்கி விடுவார் . அதுதானே நண்பர்கள் .....
       படத்தை அத்தனை சுவாரசியமாக்கியது திரைக்கதை தான் என்று எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான கமர்சியல் படங்களில் " commercial aspects/ commercial elements" என்ற பெயரில் படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சிகளை   காட்டு காட்டு என்று  காட்டி  விடுவார்கள்  . எந்த தேவையும் இல்லாமல் பாட்டு வரும் . ஒரு காமெடியன் வந்து காமெடி மாதிரி ஏதேதோ செய்வார் . கரணம் தப்பினால் மரணம் என்று வைக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் படத்திற்கு speed breakerகளாக அமைந்து விடுவதுண்டு . ஷங்கர் , ஹரி போன்ற வெகுசில இயக்குனர்களே இதில் பெரும்பாலான  நேரங்களில் ( எல்லா நேரங்களிலும் இல்லை ) வெற்றி பெறுகிறார்கள் , ஆனால் கில்லி படத்தில் ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரத்தை விளக்கவோ , கதையை நகர்த்தவோ மட்டுமே பயன் படுத்த படுகிறது .
       பாடல்கள் கூட கதையுடன் சேர்ந்தே வருகிறது 
       கபடி போட்டி வெற்றியின் கொண்டாட்டமே " சூரத்தேங்காய் அட்றா அட்றா " பாடல் 
       தனலட்சுமி கதாபாத்திரத்தின் நிலையை விளக்குவதே " ஷல்லல்லா " பாடல் . அந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் முடிவில் " யாரவனோ ... யாஆஆரவ் வ்வனோஓ ....." என்று பாடும் போது விஜய் நண்பர்களுடன் ஆற்றில் குதிக்கும் காட்சி காட்டபடுகிறது  . 
       "அர்ஜுனரு வில்லு பாடல் " ஒரு கதாநாயக வழிபாட்டு பாடல் .  ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து தனலட்சுமியை மீட்டு கொண்டு வந்தவரை பற்றி தாராளமாக " கதாநாயக வழிபாட்டு" பாடல் பாடலாம் . பட தொடக்கத்திலேயே கதாபாத்திரத்தை சற்றும் மனதில் கொள்ளாமல் அந்த நடிகரை மட்டுமே மனதில் வைத்து பாடப்படும் பாடலை விட நிஜமாகவே ஹீரோயிசம் காட்டி விட்டு பாடுவது உறுத்தவில்லை . 
       தனலட்சுமியின் பிறந்த நாள் கொண்டாட்ட பாடல் " கொக்கர கொக்கர கோ"
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . கதை சொல்லவும் இந்த பாடல் பயன் படுத்த பட்டிருக்கும் . அண்ணனும் தனலட்சுமியும் தலையை இடித்துக்கொண்டு சிரிக்கும் போது புவனா (தங்கை) "கண்ணனுக்கு வள்ளிய போல" என்று பாடத்தொடங்குவார் . புவனாவிற்கு தனலட்சுமியை பிடித்து விட்டது என்று இந்த வரிகள் சொல்லுகிறது . தனலட்சுமி பிரிந்து போகும் பொது தானும் சேர்ந்து அழுது, அண்ணனை திட்டுவது போல கடைசியில் ஒரு காட்சி வரும் . அந்த காட்சியை உறுதி படுத்த இந்த பாடல் வரிகள் உதவி புரிகிறது . எந்தவொரு பெண்ணும் ஆணிடம் இருந்து  ஒருsecured feelஐ எதிர்பார்ப்பாள் . முத்துபாண்டி மூலம் பறிபோகும் அந்த secured feel விஜய் மூலமாக திரும்ப கிடைக்கிறது . அப்போது மீண்டும் அவளுக்குள் ஒளிந்து இருக்கும் சந்தோஷமும் துறு துறுப்பும் வெளியே வருகிறது , அது கூட இந்த பாடலில் த்ரிஷா பாடும் வரிகளில் வெளிப்படுகிறது .
       கடைசியில் த்ரிஷாவிற்கு விஜய் மீது உறுதியாக காதல் வந்து விட்டது என்னும் இடத்தில் "அப்படி " போடு பாடல் . கதையுடன் சேர்ந்தே வந்தாலும் கதையை தாண்டியும் ரசிக்க வைத்த பாடல் . 
       வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் , எனக்கும் பிடித்து இருந்தது . ஆனால் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் கவர்ந்தது 
        மாநகரங்களுக்கு என்று ஒரு பவர் உண்டு ... அதை உணர்ந்திருக்கிறீர்களா ??? தமிழர்கள் என்பதால் சென்னையை எடுத்துக்கொள்வோம் . சென்னைக்கென்று ஒரு பவர் , ஒரு ஈர்ப்பு உண்டு அதை உணர்ந்திருக்கிறீர்களா???   
        "கிராமம் மாதிரி வருமா...? தாமிரபரணி தண்ணி மாதிரி வருமா...? மதுர மல்லி வாசம் மாதிரி வருமா ... ? என்றெல்லாம் பீத்திக்கொண்டாலும் எதுவுமே சென்னைக்கு ஈடாகாது . வெறும் பணம் சம்பாதிக்கும் இடம் மட்டுமாக இருந்தால் ஒரு கோடி மக்கள் இந்த சின்ன வட்டத்திற்குள் வாழ மாட்டார்கள் , அதையும் தாண்டி சென்னைக்கு ஒரு புத்துணர்வு உண்டு, சென்னையை நினைத்தாலே அந்த புத்துணர்வு நமக்குள் ஒட்டிக்கொள்ளும் .
          இதை ஏன் சொல்கிறேன் என்றால் "அப்படி போடு பாடலுக்கு முன் விஜய் த்ரிஷாவிடம் சொல்வார் . 
  இடம் : லைட் ஹவுஸ் உச்சி 
  நேரம் : இரவு 
           " இங்க இருந்து பார்த்தால் ஊரே நமக்கு தெரியும் , ஆனா நாம இங்க இருக்குறது யாருக்கும் தெரியாது . பவுர்ணமி அன்னிக்கு இங்க இருந்து பாத்தா கடல் எப்படி இருக்கும் தெரியுமா...??"
           என்று சொல்லிக்கொண்டே " ஊ ஊ ... " என்று கத்துவார் . நைட் effectல் சென்னையை காண்பிப்பார்கள் . அப்போது வித்யாசாகர் ஒரு ம்யூசிக் போடுவார் பாருங்க ... சூப்பர் ... ( சென்னை பற்றின அந்த புத்துணர்வு எனக்குள் வந்து செல்லும்   ) அடுத்தடுத்த காட்சிகளில் அதே லைட் ஹவுசில் இருந்து கொண்டு த்ரிஷா விஜயை பார்த்து "நான் இங்க இருந்து போறதில் உனக்கு கொஞ்சம் கூட feeling இல்லையா??? " என்று கேட்பார். பின்னணியில் அதே இசை . அப்போது நமக்கே த்ரிஷா அந்த ஊரை விட்டு செல்வது பற்றி feel ஆகி விடும் ... இது போல வித்யாசாகரின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உணர்வு ரீதியாக வேறு தளத்திற்கு கொடு சென்று விடும் . 
           படத்தின் ஆர்ட் டைரக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் "டி . மணிராஜ் " என்று நினைக்கிறேன். விஜய் வீட்டில் த்ரிஷாவை ஒளித்து வைத்திருக்கும்போது "இது சாத்தியமா " என்ற கேள்வி எழாமல் இருப்பதற்கு ஆர்ட் டைரக்ஷனும் ஒரு காரணம் . 
           வெறும் ஆக்ஷன் படம் என்றில்லாமல் உணர்வு ரீதியாக அணுகியதே கில்லியை இப்போது ரசிக்க வைக்கிறது 
            படம் முடிந்து வீட்டிற்கு செல்ல 5 மணி நேரம் பேருந்து பயணம் . அம்மா ஒரு முறைக்கூட அக்காவை நினைத்து அழவில்லை .... அது தான் கில்லி